வடக்கு மாகாணத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த, போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட போசாக்கு குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு, மாதாந்தம் தலா 10,000.00 ரூபா பெறுமதியான போசாக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் முதலாம் கட்ட விநியோகம் 22.06.2026 அன்று (திங்கட்கிழமை )வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பயனாளிகளுக்கான இப்போசாக்கு பொதிகளை கரவெட்டி பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் கூட்டுறவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து உரிய சிறுவர்களின் குடும்பங்களிடம் வழங்கி வைத்தனர்.
இவ்வுதவித் திட்டமானது நலிவுற்ற நிலையிலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களின் ஆரோக்கியத்தையும் போசாக்கினையும் பேணுவதற்குப் பெரும் பக்கபலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.













