மனித வேலைவாய்ப்பு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில், கரவெட்டி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)" தொடர்பான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிநெறி கடந்த 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரு தினங்களும் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், கரவெட்டி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
​நவீன தொழில்நுட்ப உலகிற்கு அவசியமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள், ஆன்லைன் வணிக மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இப்பயிற்சிநெறியில் பங்குபற்றுனர்களுக்கு விரிவான விளக்கங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
​இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பின் இறுதி நாளான 09.07.2026 அன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களை, கரவெட்டி உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .

வடக்கு மாகாணத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த, போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
​இத்திட்டத்தின் கீழ், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட போசாக்கு குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு, மாதாந்தம் தலா 10,000.00 ரூபா பெறுமதியான போசாக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் முதலாம் கட்ட விநியோகம் 22.06.2026 அன்று (திங்கட்கிழமை )வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
​கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பயனாளிகளுக்கான இப்போசாக்கு பொதிகளை கரவெட்டி பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் கூட்டுறவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து உரிய சிறுவர்களின் குடும்பங்களிடம் வழங்கி வைத்தனர்.

உலக உற்பத்தித்திறன் தினம் - "கடினமாக உழைப்பது அல்ல புத்திசாலித்தனமாக உழைப்பது"
​உலக உற்பத்தித்திறன் நாளை (ஜூன் 20) முன்னிட்டு, கரவெட்டி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களின் உற்பத்தித்திறன் அறிவை மேம்படுத்தும் நோக்கில் 19.06.2026 அன்று உற்பத்தி திறன் தொடர்பான தேர்வு நடாத்தப்பட்டது.
​அலுவலகக் கோப்பு மேலாண்மை, நேர மேலாண்மை மற்றும் சிறந்த சேவை வழங்கல் போன்ற உற்பத்தித்திறன் சார்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட இப்பரீட்சையில்,திரு.ரா. துஷ்யந்தன் அவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

உற்பத்தி திறன் செயலகத்தால்  நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index _ 1.0 போட்டியில் எமது பிரதேச செயலகம்,மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடமும்  (2/15)அகில இலங்கை ரீதியில் இருபத்தெட்டாம்  (28/340) இடமும் பெற்றுள்ளது. விசேடமாக இதில் 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

கரவெட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ஜெயச்சந்திரன் றஜீவன் அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர் பிரதிநிதிகள் ,கிராம அலுவலர்கள் ,பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் பிரதேச வைத்திய அதிகாரி, மின்சார சபை உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலீஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Scroll To Top